Date: 02, January 2022
Source: BBC News Tamil
2021-ம் ஆண்டில் மொத்தம் 127 புலிகள் இந்தியா முழுக்க உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன. பி.டி.ஐ செய்தியின்படி, கடந்த வியாழக்கிழமை அன்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்தியளவில் 2021-ம் ஆண்டு 126 புலிகள் இறந்துள்ளதாகத் தெரிவித்தது.
டிசம்பர் 29-ம் தேதி வரையிலான தரவுகளின்படி 126 புலிகள் என்றிருந்த நிலையில், டிசம்பர் 30-ம் தேதி மகாராஷ்டிராவிலுள்ள கச்சிரோலி பகுதியில் மற்றுமொரு பெண் புலி உயிரிழந்தது பதிவானது.
அதற்கு முந்தைய 29-ம் தேதியன்று, மத்திய பிரதேசத்திலுள்ள சிந்த்வாராவில், ஒரு புலி உயிரிழந்தது. அதோடு சேர்த்து, அதிகளவிலான புலிகள் உயிரிழந்துள்ள மாநிலமாக, மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
மேலும், கடந்த வாரத்திலேயே மேலும் ஒரு பெண் புலி மத்திய பிரதேசத்தின் டிண்டோரியில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. முதல்கட்ட சோதனையின்போது, விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பி.டி.ஐ செய்தி கூறுகிறது.
கடந்த 10 ஆண்டுக்கால தரவுகளைப் பார்க்கையில், 2021-ம் ஆண்டில்தான் அதிகளவிலான புலிகள் இறப்பு பதிவாகியுள்ளன. அதுகுறித்த விசாரணை நடந்துகொண்டிருப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி பி.டி.ஐ செய்தியிடம் தெரிவித்துள்ளார்.
பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி, கண்காணிப்பு ரோந்து, வேட்டையில் ஈடுபடுவோரைக் கைது செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை ஆணையம் எடுத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
30% புலிகள் காப்பக எல்லைக்கு வெளியே வாழ்கின்றன. மேலும், இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால், உயிரிழப்புகளுக்கும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்று கூறியவர், டிண்டோராவில் உயிரிழந்த பெண் புலி விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதையும் மறுத்துள்ளார்.
"புலிகளைப் பாதுகாக்க தொடர்ச்சியான கண்காணிப்பு ரோந்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல பேர் வேட்டையில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அதேநேரம் நாட்டிலுள்ள 30 சதவிகிதம் புலிகள் காப்பகங்களுக்கு வெளியே தான் வாழ்கின்றன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்," என்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இயற்கையான மரணம், மின்சாரம் தாக்கி உயிரிழத்தல், விஷம் வைத்துக் கொல்லப்படுதல் போன்றவற்றால் புலிகள் உயிரிழப்பது குறித்து பிபிசி தமிழுக்காகப் பேசிய காட்டுயிர் ஆய்வாளர் ஏ.ஜெ.டி.ஜான் சிங், "இந்தியாவில் உள்ள புலிகள் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, இறந்துள்ள புலிகளின் அளவு சுமார் 5 விழுக்காடுதான்."
மத்திய இந்தியாவில் அதிகமாக காட்டுப்பன்றிகளை தங்கள் நிலத்திற்குள் வராமல் தடுப்பதற்காகப் போடும் மின்சார வயர்களில் சிக்கி புலிகளும் இறக்கின்றன. அதற்கான மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவேண்டும். அது மட்டுமின்றி, காட்டுப்பன்றிகளுக்காக வைக்கப்படும் பொறிகளில் சிக்கியும் புலிகள் இறக்கின்றன.
"அதேபோல், கால்நடைகளை அடித்துச் செல்வதால் ஆத்திரத்திற்கு உள்ளாகி புலிகளை விஷம் வைத்துக் கொல்வதும் நடக்கிறது. கோவாவில் அது அதிகமாக நடக்கிறது.
தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை இழக்கும்போது, அந்தக் கோபம் புலிகளை விஷம் வைத்துக் கொன்றுவிடும் அளவுக்குத் தள்ளுகிறது. அந்தக் கோவத்தைத் தணிக்க, கால்நடைகளை இழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவது முன்னெடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
பசுமை பாலைவனங்கள்
இந்தியாவில் 2012-ம் ஆண்டின்போது 88 புலிகள் உயிரிழந்தன. அதற்குப் பிறகு அதிகபட்சமாக 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் முறையே 121 புலிகளும் 117 புலிகளும் உயிரிழந்தன. அதைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டில் 106 புலிகள் உயிரிழந்தன. இவை அனைத்தையும் விட அதிகபட்சமாக, தற்போது 2021-ம் ஆண்டில் 127 புலிகள் உயிரிழந்துள்ளன. அதில் 15 புலிக்குட்டிகளும் முழுமையாகப் பருவமடையாத 12 இளம் புலிகளும் அடக்கம்.
இந்தியா முழுக்க 2021-ம் ஆண்டில் உயிரிழந்த 127 புலிகளில் 15 குட்டிகளும் இறந்திருக்கும் நிலையில், குட்டிகள் உயிரிழப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் காரணங்களைத் தெரிந்துகொள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த புலிகள் ஆராய்ச்சியாளர் முனைவர்.குமரகுருவிடம் பேசினோம்.
அவர், "தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தில் பெரியளவில் மாநில அரசுகள் தரவுகளை முழுமையாகப் பகிர்ந்து கொள்வதே இன்னும் முழுமையடைய வேண்டிய தேவை இருக்கிறது. இந்நிலையில், உயிரிழந்தது பெண் புலியா, ஆண் புலியா, குட்டியா என்பதைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு முன்னேறியுள்ளோம்.
அதேநேரத்தில், புலிகள் உயிரிழக்க முக்கியக் காரணம், அவற்றுடைய உணவு, வாழ்விடம், அதைச் சுற்றியிருக்கும் சூழலியல் அளவுகோல்கள் சரியாக இல்லாமல் போவது தான். புலிகளின் ஆரோக்கியத்தை அளவிடும் சூழலியல் அளவுகோலாக, இரை உயிரினங்களின் எண்ணிக்கையும் திகழ்கிறது.
அதேபோல், ஊடுருவும் அந்நிய தாவரங்களின் (Invasive exotic plants- Lantana camera, Eupatorium glandulosum, Prosopis Juliflora, Parthineyam Sp.)பெருக்கத்தால் புல், செடி, புதர் காடு, முட்புதர் காடு போன்றவற்றில் அதிகபட்சமாக ஓரடியிலிருந்து ஏழு அடி வரை வளரக்கூடிய உள்ளூர் தாவர வகைகள்(Indigenous native plants species) அழிகின்றன. அதனால், அந்த இடம் பசுமை பாலைவனங்களாக (Green Desert) மாறிவிடுகின்றன.
தெப்பக்காடு, மசினகுடி போன்ற பகுதிகளில் பயணிக்கையில் பச்சைப் பசேலென நிலப்பகுதி இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், இரை உயிரினங்கள் சாப்பிடக்கூடிய தாவரங்கள் இருக்கிறதா என்றால் மிகவும் குறைவுதான். இந்தக் காரணங்களால், இரை உயிரினங்கள் குறையும்போது புலிகள் உயிர் பிழைத்திருப்பதும் கடினமாகிறது.
மரபணுக் குறைபாடு
இவை போக, புலிக் குட்டிகள் அதிகமாக உயிரிழப்பதற்கு மரபணுக் குறைபாடு ஒரு காரணமாக இருக்கிறது. காடுகள் துண்டாக்கப்படுவது இந்தியாவில் அதிகமாக நடக்கிறது. உதாரணத்திற்கு, சத்தியமங்கலத்தில் இருந்து முதுமலை, பந்திபூர் ஆகிய காடுகளைக் கடந்து நாகர்ஹோலே செல்லும் புலிகளுடைய வழித்தடத்தை சத்தியமங்கலத்திலேயே தடுத்துவிட்டால், அங்குள்ள புலிகளால், வேறு காடுகளுக்கு இடம் பெயர முடியாது.
அப்படி ஒரே இடத்தில் சிக்கிக்கொள்ளும் உயிரினங்களை பாட்டில் நெக் பாப்புலேஷன் (Bottle neck population)என்று சொல்வோம். அங்கிருந்து வெளியே வரமுடியாமல் போகும்போது, அங்கு வாழும் புலிகள் தங்களுக்குள்ளேயே இனப்பெருக்கம் செய்துகொள்ளத் தொடங்கும்.
இப்படியாக அவற்றுடைய வாழ்விடம் துண்டாக்கப்படும்போது, ஒரு நிலப்பகுதியிலிருந்து இன்னோர் இடத்திற்கு அவற்றால் செல்லமுடியாமல் போகும்போது, வெவ்வேறு நிலங்களில் வாழும் உயிரினங்களுக்கு நடுவே இனப்பெருக்கம் நடக்கும்போது நிகழும் மரபணுப் பரிமாற்றம் நடக்காது.
மரபணு ரீதியாக இது பல விளைவுகளுக்கு வித்திடும். அதில் முதலாவதாக, மரபணுக் குறைபாடு ஏற்பட்டு, வலிமையான அடுத்த தலைமுறை புலிகள் பிறப்பது குறைகிறது. வலிமையற்றவை என்றால், நோய் எதிர்ப்பாற்றல், ஊட்டச்சத்து போன்றவை போதுமான அளவுக்கு அவற்றுக்கு இருக்காது. இதனால் அப்படிப் பிறக்கும் புலிக்குட்டிகள் மிகவும் பலவீனமாக இருக்கும்.
அவை சரியாக நடக்காது, பால் சரியாக எடுத்துக்கொள்ளாது, நோய்த்தொற்றுக்கு எளிதில் பாதிக்கப்படும், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படும். மரபணுக் குறைபாடு ஏற்படுவது இத்தகைய பிரச்னைகளுக்கு வித்திட்டு, அவை முழுமையாக வளரமுடியாமல் உயிரிழக்கின்றன.
இதேபோல், ஒரு குட்டி வலிமையாகவே பிறந்திருந்தாலும், அதன் தாய் வேட்டையாடப்பட்டோ பொறியில் சிக்கியோ உயிரிழந்திருந்தால், அதற்கு காட்டில் வேட்டையாடுவதைக் கற்றுக்கொடுக்க, உயிர் பிழைத்திருக்கும் யுக்தியைக் கற்றுத்தர யாரும் இருக்கமாட்டார்கள்.
முதல் மூன்று மாதங்களுக்கு பால் கொடுக்க தாயும் இல்லாமல், வேட்டையாடவும் தெரியாமல், இருக்கும் அவற்றால் உயிர்பிழைத்திருக்க முடியாது. பசியால் மிகவும் வலிமையிழந்து இருக்கும் அந்தக் குட்டிகளை நாய் கூட சாப்பிட்டுவிட முடியும்.
புலிகள் மட்டுமின்றி, அனைத்து காட்டுயிர்களுமே வாழ்விடம் அழிக்கப்படுவது, துண்டாக்கப்படுவது போன்ற சிக்கல்களால் இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்கின்றன.
ஒரு காட்டை ஊடுருவிச் செல்லும் சாலையை இரவு நேரத்தில் ஒரு மணிநேரத்திற்கு மூடி வைத்தாலே காட்டுயிர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கின்றன. பந்திப்பூரில் அதுதான் நடந்தது. இரவு நேரங்களில் பயணிப்பதைத் தடை செய்தார்கள். அந்த நேரத்தில் புலிகள் மிகவும் செழித்திருக்கத் தொடங்கின.
இது தற்காலிக முயற்சி தான். இயற்கையோடு இயைந்த வளர்ச்சியை உருவாக்குவதே இத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும். தாய்மொழியைக் கற்றுக்கொள்வதைப் போலவே, அனைவருக்கும் சூழலியல் புரிதலையும் அடிப்படையில் வழங்குவது அதற்கான தொடக்கமாக அமையும்," என்று கூறினார்.
10 ஆண்டுகளில் 984 புலிகள் மரணம்
கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து 2021-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி வரையிலான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகள்படி, இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் (2012-2021) 984 புலிகள் இறந்துள்ளன. புலிகள் அதிகம் உயிரிழந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது.
அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 244 புலிகள் உயிரிழந்துள்ளன. அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் 168 புலிகள், கர்நாடகாவில் 138 புலிகள், உத்தரகாண்டில் 96 புலிகள் மற்றும் தமிழ்நாட்டிலும் அசாமிலும் தலா 66 புலிகள் உயிரிழந்துள்ளன.
இதில், இயற்கையான மரணம் என்று வகைப்பாட்டின் கீழ் 417 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுபோக, கடந்த 10 ஆண்டுகளில் 193 புலிகள் சட்டவிரோத வேட்டைக்குப் பலியாகியுள்ளன.
மேலும், 2019-ம் ஆண்டு இறந்த 22 புலிகள் மற்றும் 2020-ம் ஆண்டு இறந்த 73 புலிகளின் இறப்புக்கான காரணம் இன்னும் உறுதியாகக் கண்டறியப்படவில்லை. இவைபோக, 108 புலிகளுடைய உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
உள்ளூர் மக்களுடைய பங்களிப்பை உறுதிசெய்ய வேண்டும்
கால்நடைகளை அடித்துச் செல்வதால் ஏற்படும் இழப்பின் காரணமாக ஏற்படும் கோவத்தினால் புலிகளை விஷம் வைத்துக் கொல்வதைத் தடுக்க, ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தி கார்பெட் ஃபவுண்டேஷன் (The Corbett Foundation) என்ற அமைப்பு, அந்தச் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள கிராம மக்களுக்கு உடனடி இழப்பீடு வழங்கி வருகிறார்கள்.
அந்த அமைப்பைச் சேர்ந்த ஹரேந்திராவிடம் பேசினோம். "உலக காட்டுயிர் நிதியத்தோடு இணைந்து, கார்பெட் பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 315 கிராமங்களில் இதைச் செய்து வருகிறோம். புலியோ சிறுத்தையோ கிராமங்களுக்குள் புகுந்து கால்நடையை அடித்துச் சென்
றுவிட்டால், அதை இழந்த கிராமத்தினர் எங்களுக்குத் தகவல் கொடுப்பார்கள்.
72 மணிநேரங்களுக்குள் அவர்கள் தகவல் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அப்படி தகவல் கிடைக்கையில், எங்கள் குழு அங்குச் சென்று புலி அல்லது சிறுத்தை அடித்து இறந்த மாடுதானா என்பதை அதன் உடலை ஆய்வு செய்து உறுதி செய்வோம். உறுதி செய்யப்பட்டவுடனே நாங்கள் அவர்களுக்கு உடனடி இழப்பீட்டை வழங்குகிறோம்.
வனத்துறை கால்நடைகளை இழப்பவர்களுக்குக் கொடுக்கும் இழப்பீட்டுத் தொகையோடு இது சேராது. இதை நாங்கள் உடனடியாக இழந்த கிராமத்தினருக்குக் கொடுக்கிறோம். அரசிடமிருந்து கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை கையில் கிடைக்க ஆறு மாதங்கள் வரை ஆகும். சில நேரங்களில் ஓராண்டு கூட ஆகலாம்.
அது அவர்களுடைய கோபத்தை உடனடியாகத் தணிக்காது. அந்தக் கோபத்தில் விஷம் வைப்பது, சட்டவிரோத வேட்டைக்காரர்களுக்குத் தகவல் கொடுப்பது போன்றவற்றைச் செய்துவிட வாய்ப்புகள் உண்டு. அதனால், நாங்கள் இதைச் செய்துவருகிறோம்," என்றவரிடம் புலிகள் பாதுகாப்பில் கவனிக்கத் தவறிய, கவனிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு முயற்சிகள் குறித்துக் கேட்டோம்.
அப்போது, "இரண்டு முக்கியமான முயற்சிகளை உடனடியாக எடுத்தாக வேண்டும். முதலில், உள்ளூர் மக்கள் சமூகங்களை காட்டுயிர் பாதுகாப்பில் பங்கெடுக்க வைக்கும் வகையிலான திட்டங்கள் இல்லை. வனத்துறையும் உள்ளூர் மக்களோடு கலந்துரையாடுவதையோ நல்லுறவு பேணுவதையோ செய்வதில்லை. உள்ளுர் மக்களுக்கு காட்டுயிர் பாதுகாப்பின் அவசியத்தை உணரவைத்து, அதில் அவர்களையும் பங்கெடுக்க வைக்கவேண்டும். அதன்மூலம் அவர்களுடைய நம்பிக்கை மற்றும் ஆதரவையும் பெறவேண்டும்.
இரண்டாவதாக, புலிகள் பாதுகாப்பில் முழு வெற்றியை அடைய வேண்டுமெனில், புலிகள் காப்பகங்களைப் பாதுகாப்பதோடு நிற்காமல், அனைத்து காட்டுயிர் வழித்தடங்களையும் பாதுகாக்க முனையவேண்டும். அவை பாதுகாக்கப்பட்ட காடுகளின் எல்லைக்கு வெளியேதான் அதிகமாக இருக்கின்றன.
அவற்றைக் கவனிக்காமல் விட்டால், விரைவில் காட்டுயிர்கள் ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டிற்குப் பயணிப்பதற்கான பாதையே இல்லாமல் போய்விடும். அது இன்னும் பெரிய சிக்கலுக்குத்தான் வழிவகுக்கும்," என்று கூறினார்.
留言