top of page
Writer's pictureBCF- INDIA

உலக புலிகள் தினம் ஜூலை 29: வனத்தின் சூழல் காவலனைப் பாதுகாப்போம்

Updated: Sep 2, 2020

Published : 28 Jul 2020 19:14 pm by எஸ்.கல்யாணசுந்தரம்
















ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் காணப்படும் புலி

வனத்தின் சூழல் தன்மையைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றும் புலிகளை நாம் பாதுகாக்க வேண்டும் என்கின்றனர், வன உயிரின ஆர்வலர்கள்.

உலக புலிகள் தினம் ஜூலை 29-ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக அளவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 80 சதவீதம் இந்தியாவில்தான் வாழ்கின்றன. இந்தியாவில் 50 இடங்களில் புலிகள் சரணாலயங்கள் உள்ளன.

தமிழகத்தில் ஏற்கெனவே முதுமலை, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயங்களுடன் 2008-ம் ஆண்டில் ஆனைமலை மற்றும் 2013-ம் ஆண்டில் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் ஆகியவை புதிதாக அறிவிக்கப்பட்டன. இந்த இரு புதிய புலிகள் சரணாலயங்கள் அறிவிக்கப்படுவதற்கான ஆதாரங்களை அறிவியல்பூர்வமாக திரட்டி, ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளித்த திருச்சி பல்லுயிரி பாதுகாப்பு அறக்கட்டளை (Bio Diversity Conservation Foundation) விஞ்ஞானி ஏ.குமரகுரு, 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறியதாவது:

"இந்தியாவில் 2014-ம் ஆண்டில் 2,226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 2,967 ஆக உயர்ந்துள்ளது. நம் நாட்டில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் உள்ளன.

முனைவர் ஏ. குமரகுரு

ஆனைமலை இந்திராகாந்தி வன உயிரினச் சரணாலயம் மற்றும் தேசிய பூங்காவில் புலிகளின் எண்ணிக்கையைக் கண்டறிவதற்காக 2005-ம் ஆண்டில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது புலிகளின் காலடித் தடம் மற்றும் கேமரா பதிவு ஆகியவற்றின் மூலமே கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது டிஜிட்டல் கேமரா கிடையாது. பிலிம் கேமராதான். ரொம்பக் கஷ்டமான பணி. இருப்பினும் விடாமுயற்சியுடன் செய்து, புலிகளின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு இருப்பதை உறுதி செய்தோம். அந்த அறிக்கையைத் தொடர்ந்து ஆனைமலை புலிகள் சரணாலயத்தை 2008-ம் ஆண்டில் அரசு அறிவித்தது.

அதேபோன்று சத்தியமங்கலம் வன உயிரின சரணாலயத்தில் புலிகளின் கணக்கெடுப்பை 2009-ம் ஆண்டில் மேற்கொண்டோம். இந்த சரணாலயத்தையொட்டிய காப்புக் காடுகளிலும் புலிகள் வாழ்ந்து வருவது தெரியவந்தது. இங்கு, புலிகளின் எச்சத்தைக் கொண்டு டிஎன்ஏ சோதனை மூலம் புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டோம். இது நல்ல பலனை தந்தது. இதைத் தொடர்ந்து 545 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த வன உயிரினச் சரணாலயம், 1,411.6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக் கொண்ட சத்தியமங்கலம் புலிகள் சரணாலயமாக மாற்றி 2013-ம் ஆண்டில் அரசு அறிவித்தது. தமிழகத்தில் உள்ள 4 புலிகள் சரணாலயங்களில் 2006-ம் ஆண்டில் 76 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 264 ஆக உயர்ந்துள்ளது. இதில் சத்தியமங்கலத்தில் மட்டும் ஏறத்தாழ 90 புலிகள் உள்ளன.

வனத்தின் சூழல் தன்மையைப் பாதுகாக்கும் விலங்கினங்களில் முக்கியப் பங்கு புலிகளுக்கு உண்டு. வனத்துக்குள் செல்லும் போது தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லாமலும், வன உயிரினங்களை அச்சுறுத்தாமலும் இருக்க வேண்டும். நமது தேசிய விலங்கான புலியைப் பாதுகாக்க உலக புலிகள் தினத்தில் நாம் உறுதியேற்போம்". இவ்வாறு குமரகுரு தெரிவித்தார்.

35 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page